search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்"

    கும்பகோணம் நகரில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு அய்யப்பன் நகர் பகுதியில் ஒலைபட்டினம் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் பகுதிகளை ஒட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நீர் நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் கும்பகோணம் நகராட்சி சார்பில் ஒலைபட்டினம் வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக காலிசெய்ய எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு கொற்கை பகுதியில் பட்டாவுடன் வீட்டு மனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொற்கை பகுதியில் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற வேண்டும் என்றும், ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதியை விட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் முறைப்படி நோட்டீசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் கும்பகோணம் நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வரி, ஆர்.டி.ஓ. வீராசாமி, தாசில்தார் ஜானகிராமன், மற்றும் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் மற்றும் போலீசார் நால்ரோடு ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு இருந்த மக்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு கூறினார். இதையடுத்து அங்கு வசித்தவர்கள் உடனடியாக தங்களது வீடுகளில் இருந்த டி.வி., கட்டில் மற்றும் பாத்திரங்கள் தளவாட சாமான்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

    இதையடுத்து நகராட்சி சார்பில் ஜெ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×